என் ஃபிரண்டப்போல யாரு மச்சான் !
💖 ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்தளவிற்கு அவசியமோ அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்.
💖 நட்பு குறித்தும் நண்பர்கள் குறித்தும் இலக்கணங்கள் மாறிவிட்ட இன்றைய காலகட்டங்களில், நட்பு என்றால் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் நண்பர்கள் என்றால் யார் யார் என்பதை வள்ளுவர் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
💖 நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று நட்புக்கு மட்டும் மூன்று நேரடி அதிகாரங்களை திருவள்ளுவர் வழங்கியிருக்கிறார் என்றால் நட்பு ஒருவரின் வாழ்வில் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணிப்பாருங்கள்.
லைஃபை என்ஜாய் பண்ணு மச்சி !
💝 லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி ! லைப்ல எல்லாத்தையும் கத்துக்கணும். இந்த அபத்தமான வார்த்தைகளுக்கு வசியப்பட்டு விடாதீர்கள். இதனால், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சவால்கள் அதிகம். இதுபோன்ற நட்பினை முற்றிலுமாக தவிர்த்தல் நலம்.
💝 சிகரெட், மது உள்ளிட்டவை தான் தீய பழக்கங்கள் என்றில்லை. அடுத்தவர்களை ஏமாற்றுவது, கடமையை மறந்து களிப்புற்றிருப்பது, நேரத்தை வீணடிப்பது, புறம்பேசுவது, உழைக்காமல் உண்பது, சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்வது இவையும் தீய பழக்கங்களே. இத்தகு செயல்களை செய்பவர்களிடம் சிகரெட், மது பழக்கங்கள் இல்லாவிட்டாலும் அப்பழக்கம் உள்ளவர்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்கள்.
💝 இளமையில் கடமையை மறந்துவிட்டு தீயவர்களோட சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாவோர், தமது வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (குறள் 792)
(பொருள் : ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.)
நல்ல நண்பன் என்பவன் யார் ?
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787)
(பொருள் : நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.)
🌠 நல்ல நண்பன் என்பவன் என்றுமே தனது நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான். ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.
🌠 எனவே, தயவுசெய்து நல்ல நண்பர்கள் என்றால் யார்? என்று அடையாளம் காண கற்றுக் கொள்ளுங்கள். ஒரு மனிதனின் ஆதரவுக்கும், முன்னேற்றத்திற்கும்தான் நட்பே ஒழிய, அது ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க கூடாது.
🌠 ஒரு நட்பால் நீங்கள் பல கெட்டப் பழக்கங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வீழ்ச்சியடைவீர்கள் என்று தெரிந்தால், எந்த தயக்கமுமின்றி, அந்த நட்பை அமைதியாக துண்டித்து விடவும். அதனால் உங்களுக்கு சிறியளவில் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால்கூட, பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
Post a Comment