அலுவலகத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்!
ஒவ்வொரு அலுவலகமும் ஒரு தனி ஆளுமையைக் கொண்டதாகும். அதில், நீங்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி, அதை நீங்கள் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம். முதல் சந்திப்பிலேயே ஒருவரை ஈர்ப்பதற்கான வாய்ப்பு எப்பொழுதும் கிடைப்பதில்லை. ஆகையால், நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், முதல் சந்திப்பில் ஏற்படும் இந்த தாக்கமானது சிறிது காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும்.
காலதாமதம் இல்லாமல் எப்பொழுதும் சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்றுவிடுங்கள்.
சக ஊழியர்களுடன் எப்பொழுதும் மரியாதையாக நடந்துக் கொள்ளுங்கள். பிறரிடம் பேசும்பொழுது அவர்களது பணிகளில் குறுக்கீடு செய்யாமல் பேச வேண்டும்.
உங்களது கருத்துக்களை மட்டும் பெரிதாக எண்ணாமல் மற்றவர்களின் கருத்துக்களையும் கவனித்து அதற்கான அங்கீகாரத்தையும் அளிக்க வேண்டும். அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களைப் பற்றியோ அல்லது நிறுவனத்தைப் பற்றியோ வீண் பேச்சுகளில் ஈடுபடாதீர்கள்.
குறுகிய பணியிடத்தில் பணிபுரியும் பொழுது உங்களது வாசனை திரவியம் கூட பிறருக்கு எரிச்சலை உண்டாக்கலாம். ஆகையால், மென்மையான வாசனை திரவியத்தை பயன்படுத்த வேண்டும்.
உங்களது பணியிடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பணிச்சூழல் ஆரோக்கியமானதாகவும் கண்களுக்கு இனிமையானதாகவும் இருக்கும்.
புதிய ஊழியர்களிடம் அவர்களின் மனநிலை அறிந்து நண்பர்களாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு பணியில் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால், அவர்களைக் கண்டு புன்னகைப்பது, மதிய உணவுக்கு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
மற்றவர்களின் உழைப்பில் உங்களுக்கான புகழை தேடிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மேலாளர் தவறாக புரிந்துக் கொண்டாலும் கூட நீங்கள் நேரடியாக விஷயத்தை எடுத்துக் கூறுங்கள்.
நீங்கள் பேசும்பொழுது இயல்பான தொழில் சார்ந்த வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். குழப்பத்தை உருவாக்கும் ஆழமான தொழில் வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள்.
உங்கள் அலுவலகத்திற்கு ஏற்ற நேர்த்தியான உடையை அணியுங்கள். நீங்கள் பேசுவதற்கு முன்பு நன்றாக சிந்தித்து பேசுங்கள். நண்பர்களாக இருங்கள். ஆனால் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை அதிகமாக பகிர்வதை தவிர்த்திடுங்கள்.
Post a Comment