ஒருவனின் ஆளுமைத்திறன் அவனது வாழ்க்கையையே மாற்றி அமைக்க வல்லது. அத்தகைய ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையாக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
ஆளுமைத்திறன் :
ஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையாலோ அல்லது செயலாலோ மற்றவர்களிடம் ஏற்படும் தாக்கத்தை குறிக்கிறது.
ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவனின் ஆளுமைத்திறன் மற்றவர் இடத்தில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒருவனுடைய ஈர்ப்பும், ஏற்பும் அவனுடைய ஆளுமைத்திறனை பொறுத்தே அமைகிறது. ஒருவன் வலிமைமிகுந்த மனநிலை கொண்டிருந்தால் அவனது ஆளுமைத்திறன் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒருவேளை, வலிமையற்ற மனநிலையை ஒருவன் கொண்டிருந்தால் அவனது ஆளுமைதிறன் சற்று பலம் குறைந்ததாக இருக்கும்.
தொடர்ச்சியான நேர்மறை பழக்கங்கள், சீரான சிந்தனை மற்றும் ஆழ்ந்த மனநிலை ஆகிய மூன்றும் ஒருவனுடைய ஆளுமைத்திறனை அதிகரிக்கிறது. இந்த மூன்று விஷயங்களும் மற்றவர் இடத்திலிருந்து ஒருவனை சற்று மிகைப்படுத்திக் காட்டுகிறது.
அடிப்படை விஷயங்கள் :
ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் விஷயங்கள் பின்வருமாறு:
எண்ணங்கள் :
எண்ணங்களே வாழ்க்கையின் ஆதாரமாக அமைகின்றன. அதுவே நமது வாழ்க்கைக்கு காரணமாகவும் அமைகிறது.
நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் நமக்கு நேர்மறையான சூழலை உருவாக்கித் தருகின்றன. ஆனால் தீய எண்ணங்களும் சிந்தனைகளும் எதிர்மறையான சூழலை உருவாக்கித் தருகின்றன.
நமது வாழ்க்கை, சுற்றுப்புறம் மற்றும் செயல்பாடுகள் ஆகிய அனைத்துமே நமது எண்ணங்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நேர்மறை எண்ணங்கள் ஒருவனின் ஆளுமைத்திறனை அதிகரிப்பதோடு இல்லாமல் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களையும் அவன்பால் ஈர்த்துக் கொள்கிறான்.
தன்னம்பிக்கை :
என்னால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை நமக்குள் விதைக்க வேண்டும். இந்த நம்பிக்கைத்தான் ஆளுமைத்திறனை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கை என்பது மிக அவசியம்.
இந்த தன்னம்பிக்கை வலுப்பெற தன்னை பற்றிய சுய அலசல் வேண்டும். ஏனெனில் இந்த தன்னம்பிக்கைதான் ஒருவனது செயல்பாடுகளில் அவனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டை அதிகரிக்கின்றது.
எனவே தன்னம்பிக்கையோடு கூடிய சரியான செயல்முறை நமக்கு நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்.
குறிக்கோள் :
குறிக்கோள் என்பது நமது சிந்தனையை நேர்படுத்துகிறது, ஆற்றலை ஒருங்கிணைக்கிறது, ஆக்கத்தை பலப்படுத்துகிறது மற்றும் நமது கால அளவை சீரமைக்கிறது.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்றும் முழுமை பெறுவதில்லை. ஆகையால், நாம் வாழும் வாழ்க்கை எந்த அளவில் இருந்தாலும் நமக்கு என்று ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம்.
Post a Comment