பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு அவஸ்தைபடும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். இந்த பாத வெடிப்பு வருவதற்கு வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உண்டு. பாதவெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் இரத்தக்கசிவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பாதத்தில் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் :
📎 வெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் போதிய பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காததே ஆகும்.
📎 பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை குறைந்து, வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது.
📎 உடலின் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும். இதற்கு காரணம், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க வேண்டியதும் அவசியம்.
📎 நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், கால்கள் அதிகம் நீரில் ஊறி, உடலில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம்.
📎 பாத வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
📎 வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைத்து, அதோடு விளக்கெண்ணெய் சேர்த்து, பாத வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால் பாத வெடிப்பு குறையும்.
📎 மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பாத வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குறையும்.
📎 பப்பாளி பழத்தை பிசைந்து, அவற்றுடன் எலுமிச்சைப் பழச்சாறுக் கலந்து பாதங்களில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.
📎 கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின் பாதத்தை ஸ்கரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்துவிடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது குறைவதோடு, பாத வலியும் குறையும்.
📎 வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதில் வினிகரை ஊற்றி பகல் முழுவதும் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன், அந்த வெங்காயத்தை பாதவெடிப்பு உள்ள இடத்திலே வைத்து, காலுறைகளை அணிந்து உறங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் பாதங்களில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும்.
📎 இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வரலாம். இப்படி செய்தால் பாதவெடிப்பு வாராமல் தடுக்கலாம்.
📎 தரம் குறைவான காலணிகளை பயன்படுத்துவதாலும், சிலருக்கு பாத வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும்போது, விலை மற்றும் டிசைனை பார்த்து வாங்காமல், தரமான காலணிகளை கவனித்து வாங்குவது நல்லது.
Post a Comment