Kaalaiyel namakku seiya vendiya kadamaikal

Articles

Ads1
காலையில் நமக்கு நாமே செய்து கொள்ளவேண்டிய கடமைகள்.
'வைகறைத் துயில் எழு' என்பது சான்றோர் வாக்கு . அந்நிலையில் கதிரவன் உதயத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுதல் வேண்டும் என்பது கருத்து. காலைக் கடன்களைத் தடையின்றி முடித்தல் வேண்டும்.
மலசலம் கழிக்கும் போது கிழக்கு அல்லது மேற்குத்  திக்கைநோக்கி இருத்தல் கூடாது. பல் துலக்குதல் ஒரு தனிப்பட்ட ஆரோக்கிய மரபு எனக் கருதுதல் வேண்டும். உடல் உறுப்புகள் யாவும் நன்கு வெளியே தெரியுமாறு அமையப் பல் , நாக்கு , தொண்டை ஆகியவற்றைத் தூய்மை செய்வது தனியாக அமைந்துள்ளது. உணவு கொள்வதற்கு முன்னரும் பின்னரும் , இரவு படுக்கப் புகும் போதும் பல் துலக்குவதுண்டு. எனினும் காலையில் எழுந்ததும் பல் துலக்குதலைக் கடமையாய் கடைப்பிடித்தல் வேண்டும்.

பல்குச்சிக் கருவி ( பிரஷ் ) கொண்டு துலக்குவது தற்காலத்தில் கண் கூடு. மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாக நோக்கித் துலக்குதல் வேண்டும். அது போலவே பல் வரிசையின் உள்பக்கமும் தூய்மை செய்தல் வேண்டும். கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேல்நோக்கியவாறு துலக்குதல் வேண்டும். இதே போன்று கீழ் வரிசையில் உள்ள உட்புறத்தையும் தூய்மை செய்ய வேண்டும்.

நாவை நன்கு இருவிரல்களைக் கொண்டு தேய்த்துத் தூய்மை செய்யத் தொண்டையில் இருக்கும் கோழை முதலிய அழுக்குகள் வெளியேறி விடும். வாயை நன்கு கொப்பளித்து உமிழவேண்டும். வெந்நீரில் நீராடும் போது பாதத்திலிருந்து தொடங்கிப் பின்னர்த் தலைக்கு நீர் விட வேண்டும். ஆறு, குளம் போன்றவற்றில் நீராடும் போது முதலில் தலையினை நீரில் முழுகுமாறு செய்தல் வேண்டும். அதேபோன்று குழாய் அல்லது கிணற்று நீரை முகந்து நீராடும் போது முதற்கண் தலையிலிருந்து நீராடுதல் முறை.

 நன்கு காய்ந்த ஆடையைக் கொண்டு உடலைத் துடைத்தல் வேண்டும். முதற்கண் முகத்தையும் அடுத்தது மார்பு, கால் பாதங்கள், முதுகு ஆகியவற்றை நன்கு துடைத்துப் பின்பு தலையில் ஈரம் போகுமாறு துடைத்தல் வேண்டும். சிலரின் உடல்வாகு நீராடும் போது சிறுநீர் கழிப்பதும் அமையும். அது உடல்நலம் கெட்டதாகக் கருதப்படுவது அல்ல. ஆயினும் அத்தகைய பழக்கம் உடையவர்கள் நீராடுவதன் முன்னரே கழித்தல் நல்லது. நீராடிய பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிதல் வேண்டும். அதுவும் அழுக்கு நீங்கத் துவைத்துக் காய வைத்து மடித்து வைத்ததாக இருத்தல் வேண்டும். பிறகு இறை வழிபாடு செய்ய வேண்டும். நாம் இறைவழிபாடு செய்வது நமது மனத்தைத் தூய்மை செய்து கொள்வதற்கு ஒரு சாதனம் என்றே கருதுதல் வேண்டும்.
Ads2

Post a Comment

Previous Post Next Post