இன்றைய நிலையில் நகர்ப்புறங்களில் காஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. ஆனால், இந்த காஸ் சிலிண்டரினால் சில சமயங்களில் விபத்து நடந்து விடுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.
எப்போதெல்லாம் சிலிண்டர் இன்ஷூரன்ஸ் கிடைக்காது?
காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும்.
வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது.
கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும்.
சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும்.
சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.
நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது.
யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு பொருந்தும்?
எல்பிஜி காப்பீட்டுத் திட்ட பாதுகாப்பு, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமானது. ஒருவேளை மரணம் நேர்ந்தால், இறந்தவரின் உறவினர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வயது, வருமானம் மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து எவ்வளவு இழப்பீட்டுத் தொகை தரவேண்டுமென்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?
விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எ/ப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும்.
Post a Comment