கோழிகளுக்கு கரையான் தீவனம் (Dandy wood termites)


"கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு பழைய பானை
  • கிழிந்த கோணி/சாக்கு
  • காய்ந்த சாணம்
  • கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, ம, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்

கரையான் உற்பத்தி செய்முறை

மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.
ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத்தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

கரையான் செயலாற்றும் முறை

இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.
கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.
சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

கரையான் நன்மைகள்

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.
அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
  • செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
  • வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
  • பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2